லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ரூ.1¼ லட்சம் சிக்கியது: கோபி வட்டார போக்குவரத்து அதிகாரி உள்பட 7 பேர் மீது வழக்கு
7 பேர் மீது வழக்கு
கோபியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ரூ.1¼ லட்சம் சிக்கிய சம்பவத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ரூ.1¼ லட்சம் சிக்கியது
தமிழகத்தின் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினார்கள். அதன்படி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலையில் மாவட்ட ஆய்வுக்குழு அதிகாரி வி.சாந்தி தலைமையில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது அலுவலகத்தின் கதவுகள் பூட்டப்பட்டு, அங்குள்ள கோப்புகளை ஆய்வு செய்தனர். மேலும், அலுவலகத்தில் உள்ள பணத்துக்கு உரிய ரசீது மற்றும் ஆவணம் உள்ளதா? என்று சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 20 பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
பரபரப்பு தகவல்
விசாரணையில் கோபி வட்டார போக்குவரத்து அதிகாரி என்.முனுசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் ஏ.பி.முத்துசாமி, கண்காணிப்பாளர் சுகுமாரன் மற்றும் தனிநபர்களான பாபு, அமானுல்லா, சந்திரசேகரன் ஆகியோர் லஞ்சம் பெற்று வந்தது உறுதியானது. வட்டார போக்குவரத்து அதிகாரிகளே தனிநபர்களை தனிப்பட்ட முறையில் வேலைக்கு வைத்துகொண்டு அவர்கள் மூலமாக லஞ்ச வேட்டையில் ஈடுபட்டு வந்த பரபரப்பு தகவல் அம்பலமானது.
அலுவலகத்தில் வைத்து கொண்டு லஞ்சம் வாங்கி மாட்டி கொள்வதை தவிர்க்கும் வகையில், ஈரோடு-கோபி மெயின்ரோட்டில் மாதேஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில் வைத்து பணம் வசூல் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக பணிகளை பார்த்து வரும் புரோக்கர்கள் மூலமாகவும் அதிகாரிகள் சிலர் லஞ்சம் வாங்கி வந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி முனுசாமி, ஆய்வாளர் முத்துசாமி, கண்காணிப்பாளர் சுகுமாரன், புரோக்கர்களாக செயல்பட்ட பாபு, அமானுல்லா, சந்திரசேகரன் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.