மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
திருப்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்துவது வழக்கம். அதன்படி நேற்று தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
திருப்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிக அளவில் லஞ்சம் பெற்றுக்கொண்டு சாராய விற்பனையை ஊக்குவிப்பதாகவும், தீபாவளி பண்டிகைக்காக சாராய வியாபாரிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும் திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல்
அதன் பேரில் நேற்று இரவு 7 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் கவுரி தலைமையில் 5 போலீசார் திருப்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை. அதைத்தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், மதுவிலக்கு போலீஸ் நிலையத்தை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு பணியில் இருந்த போலீசாரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
இந்த பணம் யார் கொடுத்தது, எதற்காக கொடுத்தார்கள், இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் உருவான பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்படுத்தப்பட்டு முதல் முறையாக நடந்த இந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.