3 அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


3 அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x

3 அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திருவாரூர்

விழுப்புரம் அரசு சர்க்கரை ஆலை அதிகாரி உள்பட 3 அரசு அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

சர்க்கரை ஆலை அதிகாரி

திருவாரூர் ஜி.ஆர்.டி. கார்டன் பகுதியில் வசித்து வருபவர் முத்து மீனாட்சி. இவர் தற்போது விழுப்புரம் அரசு சர்க்கரை ஆலையில் மேலாண் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை திருவாரூர் வருவாய் கோட்டாட்சியராக(ஆர்.டி.ஓ.) பணிபுரிந்தார். அப்போது அடியக்கமங்கலம் பகுதியில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் வீட்டு மனை பட்டா வழங்கியதாகவும், பின்னர் அந்த இடத்தை நெடுஞ்சாலைத்துறை விரிவாக்க பணிக்காக மீண்டும் அரசிடமே நல்ல விலைக்கு வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

இந்த புகாரின் பேரில் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டி வந்தனர். இதையடுத்து முத்து மீனாட்சி, கிராம நிர்வாக அலுவலர் துர்காராணி, கிராம உதவியாளர் கார்த்தி ஆகியோர் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் திருவாரூரில் உள்ள சர்க்கரை ஆலை அதிகாரி முத்துமீனாட்சி வீட்டிற்கு நேற்று காலை 6 மணி அளவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட போலீசார் சென்றனர். உள்ளே சென்றதும் போலீசார் வீட்டின் வெளிப்புற கதவை இழுத்து பூட்டினர். வீட்டில் இருந்து யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. தொடர்ந்து வீட்டுக்குள் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் வீடு முழுவதும் சோதனை நடத்தினர். வீட்டில் இருந்த அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தினர். காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை 6.30 மணி வரையில் தொடர்ந்து நடந்தது.

திருவெண்ணெய்நல்லூர் வீடு

இதேபோல் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் உள்ள முத்துமீனாட்சியின் வீட்டில் சோதனை செய்ய பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி தலைமையிலான போலீசார் காலை 7 மணிக்கு வந்தனர்.

ஆனால் மேலாண்மை இயக்குனர் முத்து மீனாட்சி விழுப்புரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அரசு அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டதால், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் சோதனை செய்ய முடியவில்லை. இதையடுத்து கூட்டம் முடிவடைந்து மதியம் 1 மணியளவில் முத்து மீனாட்சி வீட்டிற்கு வந்தார். அதன் பிறகு லஞ்ச ஒழிப்பு போலீசார் வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தினர். மாலை 6 மணிக்கு மேலும் இந்த சோதனை நடந்து வருகிறது.

கிராம நிர்வாக அலுவலர்-உதவியாளர்

இதேபோல் விளமல் சிவன் கோவில் தெருவில் உள்ள விளமல் கிராம நிர்வாக அலுவலர் துர்காராணி என்பவர் வீட்டிலும், அடியக்கமங்கலம் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் கார்த்தி என்பவர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை 6 மணிக்கும் மேலும் நீடித்தது.

மாவட்ட வருவாய் அதிகாரி

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள திருமுருகன் நகரில் வசித்து வருபவர் மணிமேகலை. இவர் திருவாரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை மற்றும் நில எடுப்பு சிறப்பு பிரிவில் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே தஞ்சை மாவட்டத்திலும் பணியாற்றி உள்ளார்.

இவருடைய வீட்டிற்கு திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசன்ன வெங்கடேசன் தலைமையில் 3 போலீசார் வந்தனர். நேற்று காலை 8.30 மணிக்கு வந்த போலீசார் மணிமேகலை வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை தொடர்ந்து 6½ மணி நேரம் நடந்தது. இந்த சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story