சேலத்தில் அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் 3 பேர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


சேலத்தில் அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் 3 பேர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x

சேலத்தில் அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் 3 பேர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

சேலம்

ஆய்வு அறிக்கை

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர். இவர் தற்போது விராலிமலை எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர் தனது பதவி காலத்தில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே மஞ்சக்கரணை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரிக்கு தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

மேலும் அந்த மருத்துவக்கல்லூரியில் மருத்துவ கட்டமைப்பு தொடர்பாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி முன்னாள் டீன் பாலாஜிநாதன், ஆர்த்தோ பிரிவு பேராசிரியர் மனோகர், நோயியல் துறை பேராசிரியர் சுஜாதா, மருந்தியல் துறை பேராசிரியர் வசந்தகுமார் உள்பட 7 பேர் ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர். இந்த அறிக்கையும் முறைகேடாக தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சோதனை

இதற்கிடையில் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையொட்டி நேற்று புதுக்கோட்டையில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு மற்றும் முறைகேட்டில் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அதன்படி சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் பகுதியில் வசித்து வரும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வசந்தகுமாரின் வீட்டுக்கு நேற்று காலை 6.30 மணி அளவில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டில் சோதனை நடத்தினர்.

இதேபோல் சேலம் அஸ்தம்பட்டி ஸ்ரீரங்கபாளையம் பகுதியில் உள்ள சேலம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மனோகர் வீட்டிலும், பழனியப்பா நகரில் உள்ள சேலம் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சுஜாதா வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

போலீஸ் பாதுகாப்பு

இந்த சோதனையின் போது வீடுகளில் இருந்து யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வீடுகளில் ஒவ்வொரு அறையையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். மேலும் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் போது சில முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் சோதனையையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story