திருவண்ணாமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை ரூ.8¼ லட்சம் பறிமுதல்


திருவண்ணாமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை ரூ.8¼ லட்சம் பறிமுதல்
x

திருவண்ணாமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.8½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.8½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

லஞ்ச ஒழிப்பு சோதனை

தமிழகத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பகுதிகளில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். அதன்படி திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் எண் 2-லும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த அலுவலகம் தினமும் காலை முதல் மாலைவரை பரபரப்பாக இருக்கும். நேற்றும் ஏராளமானோர் சார்பதிவாளர் அலுவலகத்தில் திரண்டு இருந்தனர். திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை நடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சோதனையின்போது திருவண்ணாமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை கணக்கிட்டபோது ரூ.8 லட்சத்து 41 ஆயிரத்து 440 இருந்தது. தொடர்ந்து இந்த பணம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்யாறு

இதேபோல் செய்யாறு திருவத்திபுரம் இணை சார் பதிவாளர் அலுவலகத்துக்கு (எண் 2) திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று பிற்பகல் 3 மணிக்கு வந்தனர். அவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்தனர்.

உடனடியாக அலுவலகத்தின் உள்புற கதவை தாழிட்டு பணியாளர்கள், பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் மற்றும் பத்திர எழுத்தர்கள் ஆகியோரிடம் சோதனை நடத்தினர். அப்போது இருளாக இருந்ததால் செல்போன் விளக்கு வெளிச்சத்தில் சோதனை நடத்தினர்.

பத்திர பதிவு துறைக்கு கணக்கில் வராத பணம் ஏதாவது உள்ளதா? என அருகில் உள்ள பகுதிகள் மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அனைத்து இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் போலீசார் ஆய்வு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். சோதனையின்போது பணம் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

லஞ்ச ஒழிப்பு துறையினால் திடீர் சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story