போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்


போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
x

பாளையங்கோட்டையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வார விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நெல்லை மாவட்ட நிர்வாகம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு (சமூக பாதுகாப்பு துறை) சார்பில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நேற்று நடைபெற்றது.

சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கலெக்டர் விஷ்ணு, நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாணவ-மாணவர்களுடன் இணைந்து விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு, விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டனர். மேலும் போதைப்பொருட்களுக்கு எதிரான ஆசிரியர், பெற்றோர், மாணவ-மாணவிகள் அடங்கிய 5 குழுக்களை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி அனைத்து மாவட்டங்களிலும் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரு வாரத்துக்கு மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இளைஞர்கள் போதைப்பழக்கத்துக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும். மேலும் தங்களது சுற்றத்தார், அருகில் உள்ளவர்களிடம் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் போதைப்பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய 1,000 பலூன்கள் பறக்க விடப்பட்டன. மேலும் பல்வேறு துறைகள் சார்பில் போதைப்பொருட்ள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சீனிவாசன், அனிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் அருட்செல்வி, நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story