மெரினாவில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு: பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்பு
சென்னை மெரினா கடற்கரையில் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சென்னை,
உலக போதை பொருள் தடுப்பு தினத்தையொட்டி, கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் நேற்று மாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கடலோர பாதுகாப்பு குழும டி.ஐ.ஜி. கயல்விழி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வடிவேல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனிவேல், இன்ஸ்பெக்டர் செந்தில் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆடல், பாடல், தப்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் கலைஞர்கள் பங்கேற்று போதை பொருளை பயன்படுத்துவது கூடாது என்றும், போதை பொருளை பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பின்னர் சின்னத்திரை கலைஞர்கள் மிமிக்ரி மூலம் பல்வேறு சினிமா-அரசியல் பிரபலங்கள் குரல்களில் பேசி போதை பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
போதை பொருளின் தீமைகள்
இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் சார்பில் நடன, நாடக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னர் 'மைம்' எனும் கலை நிகழ்ச்சி மூலம் போதை பொருளின் தீமைகளை மக்களுக்கு, மாணவ-மாணவிகள் எடுத்து கூறினர். கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன. விடுமுறை நாளான நேற்று பொழுதை கழிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். அவர்கள் இந்த கலைநிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் பார்த்து பயனடைந்தனர்.
இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும டி.ஐ.ஜி. கயல்விழி கூறும்போது, "போதை பொருளின் தீமைகளை பொதுமக்கள் உணரும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கடலோர பாதுகாப்பு குழுமம் நடத்தி வருகிறது. எங்களது நோக்கமே போதை பொருளின் தீமைகளை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். அதன் ஒருகட்டமாகவே இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது'' என்றார்.