போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
வாணியம்பாடியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
வாணியம்பாடி உட்கோட்ட காவல்துறை மற்றும் மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி, பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி, ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தியது.
நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜய்குமார் தலைமை தாங்கினார். ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, ஆதர்ஷ் பள்ளி தாளாளர் டாக்டர் எம்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் கலந்து கொண்டு, போதை பொருள் ஒழிப்பு பற்றி சிறப்புரையாற்றி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.ஊர்வலம் கோணாமேடு பகுதியிலிருந்து தொடங்கி சி.என்.ஏ. ரோடு, காதர்பேட்டை வழியாக பஸ்நிலையத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தின்போது ஆட்டோ டிரைவர்கள், பஸ் டிரைவர்கள் மற்றும் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி போதை பொருளால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பழனி, சாந்தி, லட்சுமணன், துரைராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன், ரஞ்சித் குமார் மற்றும் அரசு அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இதனையொட்டி போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.