போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தில் மாணவர்கள் கலந்து கொண்டு போதைப்பொருள் தடுப்பு பற்றி பதாகைகளை கையில் ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். இதில் ஆவுடையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி, ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு பரிசுகள் வழங்கினார்.
அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். ஊர்வலம் வ.உ.சி.திடல் அருகில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு பெரிய கடை வீதி, எம்.ஜி.ஆர். சிலை, கட்டுமாவடி முக்கம், காமராஜர் சிலை, பஸ் நிலையத்தை சுற்றி அண்ணா சிலை வந்தடைந்தது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், போலீசார், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.