உணவுப்பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் திடீர் ஆய்வு
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவு பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவு பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
கொள்முதல் நிலையங்கள்
விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு, ராஜபாளையம், காரியாபட்டி, திருச்சுழி ஆகிய பகுதிகளில் 26 நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் 20 நேரடி கொள்முதல் நிலையங்களே செயல்பாட்டில் உள்ளது.
இந்த நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆய்வு நடத்துமாறு மதுரை சரக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சினேக பிரியா உத்தரவின் பேரில் மாவட்ட உணவு தடுப்பு பிரிவு போலீஸ் சென்னை சூப்பிரண்டு சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் ஆல்பின்பிரிஜிட் மேரி ஆகியோர் ஏ.முக்குளம், முடுக்கன்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆய்வு நடத்தினர்.
ஆன்லைன் மூலம் டோக்கன்
இந்த கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் மூலம் டோக்கன்கள் விவசாயிகளுக்கு கொடுக்கப்படுவதாகவும், தினசரி 6 விவசாயிகளிடமிருந்து தலா 50 கிலோ கொண்ட ஆயிரம் சிப்பங்கள் கொள்முதல் செய்யப்படுவதாகவும், கிலோ ரூ.21.60-க்கு கொள்முதல் செய்யப்படுவதாகவும் 5 தினங்களுக்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வின் போது வெளி மாவட்ட வியாபாரிகள் யாரும் கொள்முதல் செய்ய வரவில்லை என உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மீதமுள்ள 18 கொள்முதல் நிலையங்களிலும் சோதனை செய்யப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் குமார் தெரிவித்தார்.