நெல் கொள்முதல் நிலையங்களில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு


நெல் கொள்முதல் நிலையங்களில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு
x

நெல் கொள்முதல் நிலையங்களில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கொள்முதல் நிலையங்களில் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினார். அப்போது வியாபாரிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா? என விசாரணை நடத்தினார்.

கூடுதல் டி.ஜி.பி. உத்தரவு

தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அருண் பொறுப்பேற்றதில் இருந்து பொது வினியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை வாங்கி பதுக்கல் மற்றும் கடத்தல் சம்பந்தமான குற்றங்கள் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் அலுவலர்கள், விவசாயிகளிடம் போதுமான ஆவணங்களை பெற்றுக்கொண்டு மட்டும் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளிடம் கையூட்டு பெறக்கூடாது. விவசாயிகளை காக்க வைக்கக்கூடாது. வியாபாரிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது என்றும் கூடுதல் டி.ஜி.பி.அருண் உத்தரவிட்டுள்ளார்.

போலீசார் ஆய்வு

அதன்பேரில் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு துறை திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா அறிவுரையின் பேரில் தஞ்சை சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் தஞ்சை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஒரத்தநாடு புதூர், வடசேரி, பட்டுக்கோட்டை அருகே உள்ள அலிவலம், பேராவூரணி, கும்பகோணத்தை அடுத்த நீலத்தநல்லூர், தஞ்சையை அடுத்த வேங்கராயன்குடிகாடு ஆகிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடும் நடவடிக்கை

அப்போது போலீசார், விவசாயிகளிடம் இருந்து முறையாக கொள்முதல் செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்ததுடன், வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா? எனவும் கேட்டறிந்தனர்.

மேலும் கொள்முதல் நிலைய ஊழியர்களை அழைத்து, விவசாயகளிடம் இருந்து எந்த புகாருக்கும் இடமளிக்காமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story