கோத்தகிரி வனப்பகுதியில் நக்சல் தடுப்பு போலீசார் சோதனை
கோத்தகிரி வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்து நக்சல் தடுப்பு போலீசார் துப்பாக்கி ஏந்தி சோதனை மேற்கொண்டனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்து நக்சல் தடுப்பு போலீசார் துப்பாக்கி ஏந்தி சோதனை மேற்கொண்டனர்.
மாவோயிஸ்டுகள் நடமாட்டம்
நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டி கேரள மாநிலத்தின் வயநாடு, மலப்புரம் மாவட்ட வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருந்து வருகிறது. அவர்கள் நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையாமல் தடுக்கும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் நக்சல் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது. மாவோயிஸ்டுகளுக்கு நீலகிரி வழியாக கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஆயுதங்கள், போதைப்பொருட்கள் கிடைப்பதை தடுக்கும் வகையில் மாவோயிஸ்டு நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
நீலகிரியில் 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 36 போலீசார் அடங்கிய ஒமேகா-3 என்ற நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு, போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மாவோயிஸ்டு தடுப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
போலீசார் சோதனை
மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வனச்சரகத்திற்கும் உட்பட்ட அடர்ந்த வனப்பகுதிகளில் மாதந்தோறும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் நக்சல் தடுப்பு போலீசார் 10-க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிகளை ஏந்தியவாறு, வனத்துறையினருடன் இணைந்து கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட அளக்கரை உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதா என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதோடு, ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். மேலும் வனப்பகுதிகளில் நீர்நிலைகள் உள்ள பகுதிகளுக்கு சென்று, அங்கு மாவோயிஸ்டுகள் வந்து சென்றதற்கான தடயங்கள் ஏதேனும் உள்ளதா எனவும் சோதனை செய்தனர். போலீசார் காலை முதல் மாலை வரை அடர்ந்த வனப்பகுதிகளில் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.