ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சட்ட ஆலோசகர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஒருநபர் ஆணைய முழு அறிக்கையை அரசு வெளியிட வேண்டும், அறிக்கையின்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும், பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்கை சி.பி.ஐ. திரும்ப பெற வேண்டும். பொதுமக்களை குற்றவாளிகளாகவும், சமூகவிரோதிகளாகவும் அவதூறு செய்தவர்கள் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று கூறி உள்ளனர்.
இதே போன்று நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கையை பாராட்டி தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு ஸ்டெர்லைட் மக்கள் எதிர்ப்பு இயக்கம் சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பாத்திமாபாபு, தூத்துக்குடி வியாபாரிகள் சங்க தலவைர் விநாயகமூர்த்தி, தமிழ்நாடு மக்கள் கட்சி மாநில தலைவர் காந்தி மள்ளர், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் கிதர் பிஸ்பி, சமூக ஆர்வலர் ராஜா, நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் ரீகன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் எம்.எம். ஹசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.