ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்
ஏழைகளின் உயிரை காக்க ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஆரம்ப சுகாதார நிலையம்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகா பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகும். இப்பகுதியில் முந்திரி, கடலை உள்ளிட்டவை அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வயலுக்கு கூலி வேலைக்கு செல்பவர்களையும், வயலின் உரிமையாளர்களையும், பொதுமக்களையும் அவ்வப்போது பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் கடித்து விடுகின்றன. அவர்களை காப்பாற்றுவதற்காக அப்பகுதி மக்கள் உடனடியாக அருகே உள்ள ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்கின்றனர். ஆனால் அங்கு விஷக்கடிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், தேவையான உபகரணங்கள் ஏதும் இல்லை.
உயிரிழப்புகள்
இதையடுத்து அவர்களை காப்பாற்ற வேண்டும் என்றால் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காலதாமதம் ஏற்படுவதினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் முழுவதும் விஷம் ஏறி அவர்கள் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விடுகின்றனர். இதனால் இப்பகுதியில் விஷ ஜந்துக்களினால் பொதுமக்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
நாய் கடிக்கு கூட மருந்து இல்லாத சூழலால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கர்ப்பிணிகளுக்கு ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை செய்வதற்கான வசதிகள் இல்லாத நிலையில், அவர்களுக்கு உடனடியாக பிரசவ வலி ஏற்பட்டால் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் தினமும் ஏராளமான நோயாளிகள், முதியவர்கள் உள்ளிட்டோர் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
தரம் உயர்த்தினால்...
இதுகுறித்து சிகிச்சைக்கு வந்த பொதுமக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் டாக்டர்களுக்கான குடியிருப்பு பாழடைந்த நிலையில் பயனற்று காணப்படுகிறது. ஆண்டிமடத்தை பொருத்தவரை சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்கள் பெரும்பாலானோர் கூலி தொழிலாளிகள் என்பதால் எங்களால் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற இயலாது. அதற்கு போதுமான பண வசதி எங்களிடம் இல்லை. தற்போது இந்த மருத்துவமனையில் போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் நாங்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எங்களுக்கோ அல்லது எங்களின் பிள்ளைகளுக்கோ உடல்நிலை சரியில்லாத நிலையில் நாங்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் அன்றைய பிழைப்பு (வருவாய்) எங்களுக்கு இல்லாத நிலை ஏற்படுகிறது. எனவே இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தினால் இப்பகுதி மக்கள் பெரிதும் பயன் அடைவார்கள் என்றனர்.