சிங்கப்பூருக்கு விமானத்தில் பறக்கும் ஆண்டிப்பட்டி வெண்டைக்காய்கள்


சிங்கப்பூருக்கு விமானத்தில் பறக்கும் ஆண்டிப்பட்டி வெண்டைக்காய்கள்
x
தினத்தந்தி 18 Jun 2023 2:30 AM IST (Updated: 18 Jun 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி பகுதியில் விளையும் வெண்டைக்காய்கள் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

தேனி

ஆண்டிப்பட்டி பகுதியில் விளையும் வெண்டைக்காய்கள் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

காய்கறி சாகுபடி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றின் கரையில் உள்ள புள்ளிமான்கோம்பை, தர்மத்துப்பட்டி, மூனாண்டிபட்டி, அணைக்கரைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் காய்கறிகள் பொதுவாக ஆண்டிப்பட்டி மற்றும் சின்னமனூர் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பப்படும். பின்னர் அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தநிலையில் தற்போது ஆண்டிப்பட்டி பகுதியில் குறுகியகால காய்கறி பயிரான வெண்டைக்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வெண்டைக்காய்கள் தரமானதாகவும், சுவை மிகுந்ததாகவும் இருப்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் நேரடியாக தோட்டங்களுக்கு வந்து அவற்றை கொள்முதல் செய்து செல்கின்றனர். குறிப்பாக இப்பகுதியில் விளையும் வெண்டைக்காய்கள் சிங்கப்பூருக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

சிங்கப்பூருக்கு ஏற்றுமதி

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை வாரத்திற்கு 2 முறை மட்டுமே சிங்கப்பூருக்கு வெண்டைக்காய்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே ஆண்டிப்பட்டி வெண்டைக்காய்களை சிங்கப்பூர் நாட்டு மக்கள் விரும்பி வாங்குவதால் தற்போது தினமும் சுமார் 2 டன் அளவில் வெண்டைக்காய்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தினமும் வாகனங்களுடன் வரும் வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து வெண்டைக்காய்களை நேரடியாக கொள்முதல் செய்து, அவற்றை அட்டைப்பெட்டிகளில் பேக்கிங் செய்து, திருச்சி விமானநிலையத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கிருந்து தினமும் மாலை 6 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்படும் விமானத்தில் வெண்டைக்காய்களை அனுப்பி வைக்கின்றனர்.

ஆண்டிப்பட்டி பகுதியில் விளையும் வெண்டைக்காய்களை தரத்திற்கு ஏற்றவாறு தற்போது கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். தாங்கள் சாகுபடி செய்யும் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைப்பதால் வெண்டைக்காய் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story