ஆண்டிப்பட்டி கணவாய் மலைப் பகுதியில் சாலையோரம் இரைக்காக காத்திருக்கும் குரங்குகள்
ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில் சாலையோரம் குரங்குகள் இரைக்காக காத்திருக்கின்றன.
இரைக்காக காத்திருப்பு
தேனி-மதுரை மாவட்ட எல்லையாக ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதி உள்ளது. காடுகள் சூழ்ந்த இந்த சாலையில் ஏராளமான குரங்குகள் உள்ளன. சாலை ஓரங்களில் அமர்ந்திருக்கும் குரங்குகள் இரைக்காக மனிதர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் குரங்குகளுக்கு உணவளித்து பழக்கப்படுத்தி விட்டதால் அவை இயற்கையாகவே இரை தேடும் பழக்கத்தை மறந்து மனிதர்களை எதிர்பார்க்கும் சூழ்நிலையில் உள்ளது.
தற்போது கோடை காலம் என்பதால் குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் குரங்குகளுக்கு வாகனங்களில் செல்வோர் தண்ணீர் பாட்டில்களையும் கொடுத்து செல்கின்றனர். இதனால் வாகனங்கள் வரும் போது இரையை எதிர்பார்த்து மரங்களில் இருந்து குரங்கள் கீழே இறங்கி ஓடி வருகின்றன. பின்னர் அவை வாகனங்களை நோக்கி கை நீட்டி மறித்து இரை கேட்பது காண்போரை கலங்க வைப்பதாக உள்ளது.
உயிரிழக்கும் அபாயம்
மேலும் சாலையில் செல்வோர் வீசி செல்லும் உணவுப் பொருட்களை எடுப்பதற்காக குரங்குகள் ஒன்றோடு ஒன்று போட்டி போடுகின்றன. அப்போது ஒன்றை ஒன்று தாக்கி குரங்குகளுக்கு ரத்த காயங்களும் ஏற்பட்டு அப்படியே சாலையில் சுற்றித்திரிகின்றன. சில நேரங்களில் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
எனவே ஆண்டிப்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட கணவாய் மலைப்பகுதியில் குடிநீர் தொட்டிகள், இயற்கை உணவுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.