அந்தியூர்சின்ன மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா


அந்தியூர்சின்ன மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா
x

அந்தியூர் சின்ன மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது

ஈரோடு

அந்தியூர் சின்ன மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது.

சின்ன மாரியம்மன் கோவில்

அந்தியூர் சிங்கார வீதியில் பிரசித்தி பெற்ற சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 16-ந் ேததி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கோவிலில் கம்பம் நடப்பட்டது. இதையடுத்து தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர். மேலும் தினமும் மாலையில் கம்பத்தை சுற்றி அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கம்பம் ஆட்டம் ஆடி வந்தனர். கடந் 30-ந் ேததி காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து மேளதாளங்கள் முழங்க ஏராளமான ஆண் மற்றும் பெண் பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். நேற்று முன்தினம் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதையொட்டி மாவிளக்கு எடுத்து பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக வரும் நிகழ்ச்சியும், அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தேர் திருவிழா

முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி பெரிய தேரில் சிறப்பு அலங்காரத்தில் பெரிய மாரியம்மனும், சிறிய தேரில் சின்ன மாரியம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இதையடுத்து தேரோட்டம் நடைபெற்றது. பெரிய தேர் டிராக்டர் மூலம் இழுத்து வரப்பட்டது. சிறிய தேரை பக்தர்கள் தங்களுடைய தோளில் சுமந்தபடி முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். பின்னர் மதியம் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும், மாலையில் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது.

இதில் அந்தியூர், தவுட்டுப்பாளையம், புதுப்பாளையம், வெள்ளியம்பாளையம், சந்தியபாளையம், கரைமேடு, செம்புளிச்சாம்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதையொட்டி அந்தியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story