ஊத்தங்கரை ஆணவ கொலையில் உயிர் தப்பிய அனுசுயாவுக்கு 6 மணி நேரம் அறுவை சிகிச்சை-சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சுய நினைவு திரும்பியது
ஊத்தங்கரை ஆணவ கொலையில் உயிர் தப்பிய அனுசுயாவுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்ட 6 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு அவருக்கு சுய நினைவு திரும்பி உள்ளது.
ஆணவ கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அருணபதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது50). இவருடைய மகன் சுபாஷ் (25). இவர் வேறு சமுதாயத்தை சேர்ந்த அனுசுயா (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தண்டபாணி கடந்த 15-ந்தேதி மகன் என்றும் பாராமல் சுபாசை கொடூரமாக வெட்டி கொலை செய்தார். தடுக்க வந்த தன்னுடைய மனைவி கண்ணாம்மாளையும் வெட்டிக்கொன்றார். மருமகள் அனுசுயாவையும் வெட்டினார். இதில் அவர் பலத்த வெட்டு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த ஆணவ கொலை குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
6 மணி நேரம் அறுவை சிகிச்சை
இதற்கிடையே காயம் அடைந்த அனுசுயா, முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக 15-ந்தேதி இரவு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுசுயா சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பலத்த வெட்டுப்பட்டதால், அனுசுயாவின் உடலில் பல இடங்களில் நரம்புகள், ரத்தக்குழாய்கள், சதைகள் ஆகியவை துண்டிக்கப்பட்டன. இதையடுத்து அனுசுயாவுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதுகுறித்து சேலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் மணியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
பலத்த வெட்டுப்பட்ட அனுசுயா சுயநினைவை இழந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். துண்டிக்கப்பட்ட நரம்புகள், ரத்தக்குழாய்கள் ஆகியவற்றை சேர்ப்பதற்காக எலும்பு, நரம்பு உள்ளிட்ட 4 பேர் கொண்ட டாக்டர் குழுவினர் 6 மணி நேரம் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நடத்தி சரி செய்யப்பட்டு உள்ளது.
தற்போது அனுசுயாவுக்கு சுய நினைவு திரும்பி உள்ளது. தலையில் லேசான காயம் உள்ளது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விசாரணை நடத்த முடிவு
இந்த ஆணவக்கொலை குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆணவக்கொலை செய்த தண்டபாணி கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு கிருஷ்ணகிரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்,
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் குணம் அடைந்த பிறகு அவரை கைது செய்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். இந்த நிலையில் தற்போது அறுவை சிகிச்சைக்கு பிறகு அனுசுயா குணம் அடைந்து உள்ளார். அவர் பூரண குணம் அடைந்த பிறகு நடந்த சம்பவம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர்.