"பா.ஜனதா ஆதரிக்கும் எந்த கட்சிக்கும் தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்":கனிமொழி எம்.பி.


தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

“பா.ஜனதா ஆதரிக்கும் எந்த கட்சிக்கும் தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்” என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

"பா.ஜனதா ஆதரிக்கும் எந்த கட்சிக்கும் தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்" என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

மீனவர்கள் மாயம்

திருச்செந்தூர் அமலிநகரை சேர்ந்த மீனவர்கள் அஸ்வின் (வயது 32), பிரசாத் (41). இவர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். பின்னர் அவர்கள் வீடு திரும்பாமல் மாயமாகினர்.

அதேபோல் தோப்பூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த சிவபெருமாள் - செல்வகுமாரி தம்பதி மகன் அஜய்குமார் (10) என்ற 5-ம் வகுப்பு மாணவன் கடந்த ஜனவரி மாதம் 2-ந் தேதி உயிரிழந்தான்.

கனிமொழி எம்.பி. ஆறுதல்

இந்த நிலையில் நேற்று கனிமொழி எம்.பி. அமலிநகருக்கு வந்தார். கடலில் மீன்பிடிக்க சென்று மாயமான மீனவர்கள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.

பின்னர் தோப்பூருக்கு சென்று உயிரிழந்த மாணவன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். மேலும் மூன்று குடும்பங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.

வாக்களிக்க மாட்டார்கள்

தொடர்ந்து கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. ஆதரவு யாருக்கு என்பதை தெளிவாக முடிவு எடுக்கட்டும். தற்போது, அவர்கள் இந்த முடிவையே நீண்ட நாட்களாக குழப்பத்தில் இருந்து எடுத்துள்ளனர். அப்படிப்பட்டவர்களின் ஆதரவு எந்த பயனையும் அளிக்காது.

மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிரான செயல்பாடுகளை செய்து வருகிறது. அதனால் பா.ஜனதா ஆதரிக்கும் எந்த கட்சிக்கும் தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு

தி.மு.க. தமிழ்நாட்டு மக்களுக்காகவும், தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. எனவே இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியான காங்கிரஸ் கட்சிக்கு தான் வெற்றி வாய்ப்புகள் இருக்கிறது. இலங்கை- தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும். அதுமட்டுமல்லாமல், இரு நாட்டு மீனவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமுகமான தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, தூத்துக்குடி மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல்சேவியர், ஆய்வாளர் சுப்பிரமணியன், சார் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், திருச்செந்தூர் கிராம நிர்வாக அலுவலர் செல்வலிங்கம், அமலிநகர் பங்குதந்தை வில்லியம் சந்தானம், ஊர்தலைவர் பாஸ்கர், செயலாளர் ராஜா, பொருளாளர் குளோரியான், தி.மு.க. மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிகோ உள்பட பலர் உடன் சென்றனர்.


Next Story