தி.மு.க.வுடன் உள்ள எந்த கட்சியும் அ.தி.மு.க. கூட்டணியில் சேராது ஈரோட்டில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
தி.மு.க.வுடன் உள்ள எந்த கட்சியும் அ.தி.மு.க. கூட்டணியில் சேராது என்று ஈரோட்டில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி அளித்தாா்
தி.மு.க. கூட்டணியில் உள்ள எந்த கட்சியும் அ.தி.மு.க. கூட்டணியில் சேராது என்று ஈரோட்டில் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டம்
ஈரோட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்தியில் பிரதமர் மோடி அரசு பொறுப்பேற்றது முதல், சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கான உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனம் பயன்பெறும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்கிறது. இவற்றை எல்லாம் பொதுமக்களிடம் எடுத்து செல்லும் இயக்கத்தை இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளோம். தமிழகத்தில் இருந்து வரி மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயில், தமிழகத்துக்கு உரிய நிதியை வழங்காததால் தான் பழைய ஓய்வூதிய திட்டம் அமலாக்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தி.மு.க. அரசால் நிறைவேற்ற முடியவில்லை.
சென்னிமலை சம்பவம்
மத்திய அரசு ரூ.1 வருவாயாக பெற்றுவிட்டு 23 காசுகளை தமிழகத்துக்கு தருகிறது. ஆனால் ரூ.1 வருவாயாக பெற்று கொண்டு, உத்தரபிரதேசத்துக்கு ரூ.4 திரும்ப தருவதை பார்க்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க முன்வந்தது. ஆனால் எந்த காரணமும் கூறாமல் தமிழக கவர்னர் அதை நிராகரித்துள்ளார்.
சென்னிமலையில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தபோது, அவர்களை வீட்டுக்குள் சென்று ஒரு சிலர் தாக்கியதும், சென்னிமலை மலையை வேறு ஒன்றாக மாற்றுவோம் என கிறிஸ்தவ முன்னணியினர் என்ற பெயரில் சிலர் தவறாக பேசியதையும் கண்டிக்கிறோம். இந்த சம்பவத்தில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால், இவ்வளவு பெரிய கலவர சூழல் ஏற்பட்டிருக்காது. கொங்கு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மத ரீதியான பதற்ற சூழலை தணிக்க, எங்கள் இயக்கத்துடன் கூடிய அனைத்து கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டம் விரைவில் நடத்த உள்ளோம்.
அ.தி.மு.க. கூட்டணி
மனித கழிவை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது என்றும், கழிவு நீர் அகற்றும்போது தொழிலாளர் இறந்தால் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். பா.ஜ.க.வின் அனைத்து செயலுக்கும் ஆதரவு தெரிவித்துவிட்டு, ஆட்சி முடியும் தருவாயில் ஆதரவை திரும்ப பெறும் அ.தி.மு.க.வை பொதுமக்கள் அறிவார்கள்.
இந்த இரு கட்சிகளையும் ஒன்றாகத்தான் பார்க்கின்றனர். அ.தி.மு.க. தனியாக வந்ததால், தி.மு.க. கூட்டணியில் உள்ள எந்த கட்சியும் அ.தி.மு.க. கூட்டணியில் சேராது. அதுபோன்ற எண்ணம் யாருக்கும் இல்லை. அதேநேரம் தி.மு.க. கூட்டணியில் எந்த புதிய கட்சியும் இதுவரை இணைய முன்வரவில்லை. ஏற்கனவே உள்ள கட்சிகளே, அந்த கூட்டணியில் நீடிக்கிறது.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.