அலகுமலையில் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
அலகுமலையில் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
பொங்கலூர்
பொங்கலூர் அருகே உள்ள அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரைத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலையில் பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து நாமாவளிகள் கூறிக்கொண்டு மலையை வலம் வந்தனர். பின்னர் ஆறுபடை வீட்டில் அமைந்துள்ள முருகப்பெருமானையும், கார்ய சித்தி ஆஞ்சநேயரையும் வழிபட்டு, பஞ்ச மூர்த்திகளாக அமைக்கப்பட்ட அலங்கார விக்ரஹமூர்த்தியை வழிபட்டனர். தொடர்ந்து மூலவர் முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பால் அபிஷேகம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தமிழ் புத்தாண்டையொட்டி கோவிலின் அர்த்தமண்டபம் மற்றும் பிரகார மண்டபத்தில் மலர்கள் மற்றும் 2 டன் பழ வகைகளை கொண்டு தோரணம் கட்டி அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதத்தில் பஞ்சாங்கம் படிக்கப்பட்டது.
அலகுமலை அடிவாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பந்தல் அமைக்கப்பட்டு, காலை முதல் மாலை வரை இடைவிடாது பக்தர்களுக்கு அன்னதானம் வழ்கப்பட்டது. கோவிலுக்கு ஏராளமானோர் குடும்பத்துடன் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழுத் தலைவர் மற்றும் அறங்காவலர் சின்னுக்கவுண்டர் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர். அவினாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
-