மாமரங்களில் காவடிப்புழு தாக்குதல்
அய்யம்பாளையம் பகுதியில் மாமரங்களில் காவடிப்புழு தாக்குதல் குறித்து பூச்சியியல் வல்லுனர்கள் ஆய்வு செய்தனர்.
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியில், சுமார் 500 ஹெக்டேர் பரப்பளவில் மா மரங்கள் உள்ளன. இங்குள்ள மாமரங்களில் காவடிப்புழு தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால் மாங்காய் சாகுபடி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் புகார் கூறினர். இதனையடுத்து காந்திகிராம வேளாண்மை அறிவியல் மையத்தின் தோட்டக்கலை, பூச்சி மற்றும் நோயியியல் மற்றும் மண்ணியியல் தொழில்நுட்ப வல்லுனர்கள் செந்தில்குமார், ஷாகின்தாஜ், திருநாவுக்கரசு ஆகியோர் அய்யம்பாளையம் பகுதிக்கு வந்தனர். அங்குள்ள மாந்தோப்புகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் காவடிப்புழு தாக்குதலை தடுப்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
மாமரங்களில், மலர் கொத்துகளை பிணைத்து அதனுன் இருந்து மொட்டுகளை காவடிப்புழுக்கள் உண்ணுகின்றன. இதனால் பூங்கொத்துக்கள் காய்ந்து விடும். காவடிப்புழு தாக்குதல் இருக்கும் பட்சத்தில், மாமரங்களுக்கு ஸ்பினோசாட் மருந்து (அல்லது) ஸ்பைனிடோரம் மருந்து 80 மில்லிலிட்டர், அசாடிராக்டின் மருந்து 300 மில்லிலிட்டரை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து, அதனுடன் 200 மில்லிலிட்டர் ஒட்டும் பசையை சேர்த்து தெளிக்க வேண்டும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினர். இந்த ஆய்வின் போது தோட்டக்கலை துணை இயக்குநர் பெருமாள்சாமி, தோட்டக்கலை உதவி இயக்குநர் அலெக்ஸாண்டர், துணை தோட்டக்கலை அலுவலர் லெட்சுமணன், உதவி தோட்டக்கலை அலுவலர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.