மக்காச்சோள பயிரை தாக்கும் படைப்புழு
மக்காச்சோள பயிரை தாக்கும் படைப்புழு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து ஆலோசனை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாணாபுரம்
வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஹெக்டர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதி விவசாயிகள் நெல், கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிர்களையும் பருவகால பயிர்களாக பயிறு வகைகளையும் பயிரிட்டுள்ளனர்.
வாணாபுரம் சதாகுப்பம், பழையனூர், தேவனூர், நவம்பட்டு, நரியாப்பட்டு, பறையம்பட்டு, வெறையூர், தச்சம்பட்டு, சின்னகல்லப்பாடி, பெரியகல்லப்பாடி, கல்லேரி, பெருமனம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக ஒரு சில பகுதிகளில் நெல் நடவு செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளனர். ஓரளவிற்கு தண்ணீர் இருந்தால் எளிதில் வளரக்கூடிய பயிராக மக்காச்சோளம் உள்ளது. கடந்த 40 நாட்களுக்கு முன்பு பயிரிடப்பட்ட மக்காச்சோளபயிர்கள் வளராமல் காணப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி மக்காச்சோள பயிரை அதிகஅளவில் பயிரிடப்பட்டு வருகிறோம். ஆனால் படைப்புழுவை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாமல் கடும் சிரமமாக உள்ளது.
குறிப்பாக தண்டுப் பகுதிகள் மட்டுமல்லாமல் மேற்பகுதிகள் அனைத்தும்பூச்சிகள் தாக்கப்படுவதால் வளராமல் காணப்படுகிறது. இதற்காக பலவகையான பூச்சி மருந்துகளை பயன்படுத்தியும் கட்டுப்படுத்த முடியவில்லை.
இப்பகுதிகளில் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி இருந்தும் எங்களுக்கு எந்த விதமான பயன்களும் இல்லை.
எனவே சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகள் விவசாய நிலங்களை நேரடியாக ஆய்வு செய்வது மட்டுமல்லாமல் இந்தப் படைப்புழு தாக்குவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து எங்களின் வாழ்வாதாரமான விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.