வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல்
வேலூர் மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தலில் தி.மு.க. கவுன்சிலர்கள் 9 பேர் வெற்றி பெற்றனர்.
விரிவிதிப்பு தேர்தல்
வேலூர் மாநகராட்சி விரிவிதிப்பு மற்றும் மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமை தாங்கினார். துணை மேயர் சுனில்குமார், உதவிகமிஷனர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டார்.
9 இடங்களை கொண்ட வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கு தி.மு.க.வை சேர்ந்த 9 கவுன்சிலர்களும், ஒரு அ.தி.மு.க. கவுன்சிலரும் போட்டியிட்டனர். அதனால் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. மேயர், துணைமேயர் உள்பட 55 கவுன்சிலர்கள் மட்டுமே வாக்களிக்க வந்திருந்தனர். இதில் 5 கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை.
தி.மு.க. கவுன்சிலர்கள் வெற்றி
கவுன்சிலர்கள் 55 பேரும் ஒவ்வொருவராக தங்களின் வாக்குச்சீட்டை வாக்குப்பெட்டியில் போட்டனர். இதையடுத்து உடனடியாக அந்த வாக்குகள் கவுன்சிலர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டன.
தேர்தல் முடிவில் தி.மு.க. கவுன்சிலர்கள் அஸ்மிதா, சக்கரவர்த்தி, சித்ரா, சுதாகர், சேகர், நித்தியகுமார், முருகன், ரஜினி, சண்முகம் ஆகியோர் வெற்றி பெற்றனர். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கவுன்சிலர் சரவணன் தோல்வியடைந்தார்.
வெற்றி சான்றிதழ்
அதைத்தொடர்ந்து விரிவிதிப்பு மற்றும் மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன் ஆகியோர் வெற்றி சான்றிதழ்கள் வழங்கினர். இதில் முன்னாள் எம்.பி. முகமதுசகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தேர்தலையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கூட்ட அரங்கிற்குள் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் தவிர யாரும் அனுமதிக்கப்படவில்லை. கூட்டரங்கு கதவுகளுக்கு போலீசார் பூட்டு போட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்தல் தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.