பயிர் காப்பீடு செய்ய வேண்டுகோள்


பயிர் காப்பீடு செய்ய வேண்டுகோள்
x

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் சம்பா பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் சம்பா பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இயற்கை இடர்பாடுகள்

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்தவும், மேலும் வேளாண்மையில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்த ஊக்குவிக்கவும், புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் 2020-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா மற்றும் கோடை பருவத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்திட வேளாண்மை இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் ரபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.

பயிர் காப்பீடு

மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, கொள்ளிடம் மற்றும் செம்பனார்கோவில் ஆகிய வட்டாரங்களில் ரபி நெல் 2-வது பருவத்திற்கு 282 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நெல் 3-வது பருவத்திற்கு 72 வருவாய் கிராமங்களும், ரபி இதர பருவ பயிர்களான நெல் தரிசு உளுந்து, நெல் தரிசு பச்சை பயறு, நெல் தரிசு பருத்தி, நிலக்கடலை மற்றும் கரும்பு பயிர்களுக்கு குறு வட்டார அளவில் பிர்காக்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

நெல் 2-வது பருவத்திற்கு பயிர்காப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.35 ஆயிரத்து 50 அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமீயத்தொகை ஏக்கருக்கு ரூ.526 ஆகும். காப்பீடு செய்ய கடைசி நாள் வருகிற நவம்பர் மாதம் 15-ந்தேதி ஆகும்.

பிரிமீயத் தொகை

நெல் 3-வது பருவத்திற்கு பிரிமீயத்தொகை ரூ.526.. காப்பீடு செய்ய கடைசி நாள் 15.3.2023-ந்தேதி ஆகும். இத்திட்டத்தின் கீழ் கடன்பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் விருப்பத்தின் பெயரில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ, பதிவு செய்து கொள்ளலாம்.

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்று, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story