பெண்களுக்கு ரூ.1,000 உரிமை தொகை திட்டத்தில் முதற்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24-ந்தேதி தொடக்கம்


பெண்களுக்கு ரூ.1,000 உரிமை தொகை திட்டத்தில் முதற்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24-ந்தேதி தொடக்கம்
x
தினத்தந்தி 20 July 2023 2:30 AM IST (Updated: 20 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கு ரூ.1,000 உரிமை தொகை திட்டத்தில் தேனி மாவட்டத்தில் முதற்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது என்று கலெக்டர் தெரிவித்தார்.

தேனி

பெண்களுக்கு ரூ.1,000 உரிமை தொகை திட்டத்தில் தேனி மாவட்டத்தில் முதற்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது என்று கலெக்டர் தெரிவித்தார்.

விண்ணப்ப பதிவு முகாம்கள்

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக அரசு சார்பில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டமாக நடக்கிறது. முதல்கட்டமாக வருகிற 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 4-ந்தேதி வரையும், 2-வது கட்டமாக ஆகஸ்டு 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையும் முகாம்கள் நடக்கின்றன.

ரேஷன் கடை பணியாளர்கள் ஒவ்வொரு கடை பகுதியிலும் முகாம் நடக்கும் நாள், நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை நேரில் வழங்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை பெறுவதற்காக ரேஷன் கடைக்கு பொதுமக்கள் வரத்தேவையில்லை. ரேஷன் கார்டு இருக்கும் ரேஷன் கடைப்பகுதியில் நடக்கும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

ஆவணங்கள்

முதல்கட்டமாக பெரியகுளம், உத்தமபாளையம் தாலுகா பகுதிகளிலும், 2-வது கட்டமாக போடி, தேனி, ஆண்டிப்பட்டி தாலுகா பகுதிகளிலும் விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடக்கின்றன. விண்ணப்பத்தோடு வழங்கப்படும் டோக்கனில் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் குடும்பத்தலைவிகள் முகாம் நடக்கும் இடத்துக்கு வர வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மின் கட்டண அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை. வருமானச் சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளையும் இணைக்கத் தேவையில்லை.

விண்ணப்பப் பதிவு முகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாகக் கூடுவதை தவிர்க்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும். விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடக்கும்.

விரல் ரேகை பதிவு

முகாமுக்கு வரும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும். பயனாளிகளின் விரல் ரேகைப் பதிவு சரியாக அமையவில்லை எனில், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண் வழியாக ஒரு முறை கடவுச்சொல் (ஓ.டி.பி.) பெறப்படும். விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் தொலைபேசி இணைக்கப்பட்டு இருந்தால், அந்த செல்போனை முகாமுக்கு எடுத்து வருவது விண்ணப்பப் பதிவை எளிமைப்படுத்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story