ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி


ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி
x

ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி

நாகப்பட்டினம்

நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கந்தூரி விழா

நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டு தோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு விழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 31-ந் தேதி வாணவேடிக்கையும், 1-ந்தேதி இரவு பீர் அமரவைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.

சந்தனக்கூடு ஊர்வலம்

முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு நாகை யாஹூசைன் பள்ளிவாசல் தெருவில் இருந்து புறப்பட்டது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட கப்பல்கள், செட்டிபல்லக்கு, சாம்பிராணி சட்டி, பெரிய ரதம், சின்னரதம் ஆகியவை நாகையின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நாகூர் தர்கா அலங்கார வாசலுக்கு வந்தடைந்தது.

சந்தனம் பூசும் நிகழ்ச்சி

நேற்று அதிகாலை சந்தனகூடு ஊர்வலம் கால்மாட்டு வாசல் வந்து அடைந்தது. பின்னர் சந்தன கூட்டில் இருந்து சந்தனகுடத்தை இறக்கி ஆண்டவர் சன்னதிக்கு கொண்டு சென்றனர்.

அதனை தொடர்ந்து காலை 6 மணி அளவில் பெரிய ஆண்டவர் என்று அழைக்கப்படும் ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம் சமாதிக்கு சந்தனம் பூசப்பட்டது.

அமைச்சர், ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு தர்காவில் பிரார்த்தனை செய்தனர். அவர்களை தர்கா மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் செய்யது காமில் சாஹிப், ஆலோசனை குழு தலைவர் முகமது கலிபா சாஹிப் ஆகியோர் வரவேற்றனர். சந்தனம் பூசும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தலைமையில் 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 10 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story