கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் தொடக்கம்
தேனி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கியது.
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவதற்கான, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்ப பதிவு முகாம்கள் கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கியது. தேனி மாவட்டத்தில் 2 கட்டமாக இந்த முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, பெரியகுளம், உத்தமபாளையம் தாலுகாக்களில் முதற்கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் 24-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை நடந்தது. 259 இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரத்து 517 பேர் விண்ணப்பம் பதிவு செய்தனர்.
இதையடுத்து தேனி, போடி, ஆண்டிப்பட்டி ஆகிய தாலுகாக்களில் 2-ம் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நேற்று தொடங்கியது. 258 இடங்களில் இந்த முகாம்கள் நடக்கின்றன. இந்த முகாம்கள் வருகிற 16-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி பெண்கள் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பித்தனர். இதற்காக நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.
இதற்கிடையே ஆண்டிப்பட்டி அருகே திம்மரசநாயக்கனூர், கன்னியப்பபிள்ளைபட்டி, கொத்தப்பட்டி, ராஜதானி ஆகிய பகுதிகளில் விண்ணப்ப பதிவு முகாம்களை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.