விண்ணப்பங்களை 23-ந் தேதிக்குள் வினியோகிக்க வேண்டும்


விண்ணப்பங்களை 23-ந் தேதிக்குள் வினியோகிக்க வேண்டும்
x

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களை 23-ந் தேதிக்குள் வினியோகிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நந்தகோபால் அறிவுறுத்தினார்.

திருப்பத்தூர்

ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான மாவட்ட முதல்நிலை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.

வேளாண்மை, உழவர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான நந்தகோபால் தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

23-ந் தேதிக்குள்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டப் பணிகள் இரண்டு கட்டமாக நடத்தப்பட வேண்டும். முதல் கட்ட பணிகளை செயல்படுத்த குறைந்தபட்சம் 750 நபர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும். நாள்தோறும் குறைந்தபட்சம் காலை, மாலை தலா 30 பேர்களுக்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டும்.

வருகிற 23-ந் தேதிக்குள் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் பணி முடிக்கப்பட வேண்டும். பணி நடைபெறும் முகாம்களில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை நகராட்சி ஆணையர்கள் மற்றும் தாசில்தார்கள் கண்காணிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கென குறிப்பிட்ட நாட்களில் வந்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் முகாம் நடைபெறும் இடங்களில் மருத்துவர்கள், செவிலியர்களை கொண்ட மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

ஒவ்வொரு கிராமத்திலும் மற்றும் நகரத்திலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு முறையாக உரிமைத்தொகை சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். இப்பணிகளில் தொய்வு ஏற்படாமல் உரிய நேரத்தில் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் உரிய அலுவலர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்,

அதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான இல்லம் தேடி கல்வி திட்ட பணியாளர்களுக்கு நடந்த பயிற்சியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மகளிர் திட்ட இயக்குனர் ரேணுகாதேவி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், வருவாய் கோட்டாட்சியர்கள் பானு, பிரேமலதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி, தாசில்தார்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story