தருமபுரி மாவட்டத்தில் புதிய தொழிற் பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் புதிய தொழிற் பள்ளிகள் தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழிற் பள்ளிகளின் அங்கீகாரத்தை புதுப்பிக்கவும் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதிய தொழிற்பள்ளிகள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் தொடங்குதல் மற்றும் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்க உள்ள அனைத்து தொழிற் பிரிவுகள் கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
பயன் பெறலாம்
விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வு கட்டணம் ஆகியவற்றை ஆர்.டி.ஜி.எஸ். அல்லது என்.இ.எப்.டி. மூலம் செலுத்த வேண்டும். அனைத்து தொழில் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் ரூ.5 ஆயிரம் ஆகும். ஆய்வு கட்டணமாக ரூ.8 ஆயிரம் செலுத்த வேண்டும்.
அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்க வருகிற பிப்ரவரி மாதம் 28-ந் தேதி கடைசி நாள் ஆகும். அதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகளை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.