கிறிஸ்தவ ஆலயங்களை பழுது நீக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்


கிறிஸ்தவ ஆலயங்களை பழுது நீக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களை பழுது நீக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களை பழுது நீக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பழுது நீக்க நிதி உதவி

தமிழகத்தில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ ஆலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களை பழுது நீக்கம் செய்ய விண்ணப்பிக்கலாம்.கிறிஸ்தவ ஆலயங்களை பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக தேவாலய கட்டிடத்தின் வயதிற்கேற்ப அரசின் மானிய தொகையாக ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

சொந்த கட்டிடம்

கிறிஸ்தவ ஆலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். ஆலயமும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டில் இருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருக்க கூடாது. அதற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியான www.bcmbcmw@tn.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.

உரிய ஆவணங்கள்

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனைத்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை இணைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 3-வது தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேற்குறிப்பிட்ட படிவத்தினை அலுவலகத்திலும் பெற்று விண்ணப்பிக்கலாம்.மாவட்ட கலெக்டரால் நியமிக்கப்பட்ட குழுவினரால் கிறிஸ்தவ ஆலயங்களை பார்வையிட்டு கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்து முன்மொழிவுடன் சிறுபான்மையினர் நல இயக்ககத்திற்கு நிதிஉதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும்.

மின்னணு பரிவர்த்தனை

நிதிஉதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் வழங்கப்படும். இந்த திட்டத்தினை அனைத்து கிறிஸ்தவ அமைப்புகள் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story