தீவனம் பயிரிட மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
தீவனம் பயிரிட மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும் தீவன அபிவிருத்தி திட்டங்களை இந்தாண்டு கால்நடை பராமரிப்புத்துறை செயல்படுத்திட உள்ளது. 40 ஏக்கரில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் பொருட்டு, நீர்ப்பாசன வசதி கொண்ட மர, பழத்தோட்டத்தில் 0.5 ஏக்கர் முதல் 1 எக்டேர் பரப்பளவில் பல்லாண்டு தீவன பயிர்களை ஊடுபயிராக பயிரிட்டு குறைந்தபட்சம் 3 வருட காலம் வரை பராமரிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.3,000, ஒரு எக்டேருக்கு ரூ.7,500 மானியமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும் இத்திட்டத்தில் கிராமத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான மொத்த பயனாளிகளில் குறைந்தபட்சம் 30 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். தீவன விரயத்தை குறைப்பதற்கும், ஜீரண சக்தியை அதிகப்படுத்தவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் 50 சதவீதம் மானியத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் குறைந்தபட்சம் 2 கால்நடைகள் மற்றும் 0.50 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனம் சாகுபடி செய்தல் மற்றும் மின்சார வசதி உடையவராகவும், கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற அரசு மானிய திட்டங்களில் பயன்பெற்றவராகவும் இருக்கக்கூடாது. மேலும் சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியின பயனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்திற்காக தேர்வு செய்யும் பயனாளிகள் 50 சதவீதம் பயனாளி பங்குத்தொகை செலுத்த வேண்டும். எனவே தகுதி வாய்ந்தவர்கள் வருகிற 10-ந்தேதிக்குள் தங்கள் கிராமத்திற்கு உட்பட்ட கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களை பெற்று உரிய படிவ விண்ணப்பங்கள் அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.