இலவசமாக மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்


இலவசமாக மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயத்துக்கும் மற்றும் மண்பாண்டம் தயாரிக்கவும் இலவசமாக மண் எடுக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

திருவாரூர்

திருவாரூர்:

:திருவாரூர் மாவட்டத்தில் விவசாயத்துக்கும் மற்றும் மண்பாண்டம் தயாரிக்கவும் இலவசமாக மண் எடுக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

மண் எடுக்க அனுமதி

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு சிறு கனிம விதிகளின் படி நீர் நிலைகளில் அமைந்துள்ள மண், வண்டல்மண், சவுடுமண், களிமண் போன்ற கனிமங்களை உண்மையான வேளாண் நோக்கத்திற்காக வெட்டி எடுத்து செல்ல நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மண் எடுக்க விண்ணப்பிக்கலாம். மேலும், பொதுமக்கள், மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்களின் இருப்பிடம் அல்லது விவசாய நிலமானது, வண்டல் மண், சவுடுமண், களிமண் ஆகிய மண் வகைகளை எடுக்க விண்ணப்பிக்கும் ஏரி மற்றும் குளம் அமைந்துள்ள அல்லது அதனை சுற்றியுள்ள வருவாய் கிராமங்களில் அமைந்திருக்க வேண்டும். விவசாயப் பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்க விண்ணப்பம் செய்வோர் தங்களுடைய விவசாய நிலங்கள் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரின் சான்று, சிட்டா மற்றும் அடங்கல் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம்

விவசாயப் பயன்பாட்டிற்காக 1 ஏக்கர் பரப்பளவுள்ள நன்செய் நிலத்திற்கு 2 ஆண்டுகளுக்கு 1 முறை 75 கன மீட்டருக்கு மிகாமலும், புன்செய் நிலங்களுக்கு 90 கனமீட்டருக்கு மிகாமலும் வண்டல் மண் இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும். பொதுமக்களின் சொந்தப்பயன்பாட்டிற்கு 30 கனமீட்டருக்கு மிகாமல் சவுடுமண் இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும். மண்பாண்டங்கள் செய்வதற்கான களி மண் எடுக்க விண்ணப்பம் செய்வோருக்கு 60 கனமீட்டருக்கு மிகாமல் இலவசமாக களிமண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.

இதற்கு சம்பந்தப்பட்ட மண்பாண்டத் தொழிலாளர் சங்கம் அல்லது கிராம நிர்வாக அலுவலரின் சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். விவசாயம் பொதுப்பயன்பாடு மற்றும் மண்பாண்டம் செய்யும் நோக்கத்தில் மண் எடுக்க வழங்கப்படும் அனுமதி 20 நாட்கள் மட்டும் செல்லத்தக்கதாகும்.

நிபந்தனைகள்

எந்திரப் பயன்பாட்டுச் செலவு மற்றும் ஏற்றுக்கூலியாக வண்டல்மண், சவுடுமண், களிமண் எடுக்க கனமீட்டர் ஒன்றுக்கு ரூ.35.20 பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறையினர் சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் பதவியின் பெயரில் வங்கி கேட்பு வரைவோலையாக எடுத்து அளிக்க வேண்டும்.பொதுப்பணித்துறையினர், ஊரகவளர்ச்சித் துறையினரின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பயனாளிகள் வண்டல்மண், சவுடுமண், களிமண் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story