பழுதான தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்


பழுதான தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
x

பழுதான தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் பழுதடைந்த தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பழுதடைந்த தேவாலயங்கள்

தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு தேவாலயம் பதிவு செய்யப்பட்டு சொந்த கட்டிடத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருத்தல் வேண்டும். மேலும் எந்தவொரு வெளிநாடுகளில் இருந்தும் தேவாலயத்திற்கு நிதியுதவி பெற்றிருத்தல் கூடாது. இதுதொடர்பாக சான்றிதழ் உரிய படிவத்தில் அளிக்க வேண்டும்.

தகுதியின் அடிப்படையில் முன்மொழிவுகள் சிறுபான்மையினர் நல இயக்ககத்திற்கு பரிந்துரை செய்யப்படும். மாவட்டத்தில் உள்ள மறைமலை, கத்தோலிக்க போதகரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தேவாலயங்கள் பழுதடைந்து இருந்தால் தேவாலய கட்டிடத்தின் வயது, பழுது ஆகியவற்றை கருத்தில் கொண்டு 10 முதல் 15 ஆண்டுகள் வரை இருப்பின் ரூ.1 லட்சமும், 15 முதல் 20 ஆண்டுகளாக இருப்பின் ரூ.2 லட்சமும், 20 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பின் ரூ.3 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

நேரில் சென்று ஆய்வு...

இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் சான்றிதழ் www.bcmbcmw@tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்துடன் பிற்சேர்க்கைகளை பூர்த்தி செய்து அனைத்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களோடு மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். கலெக்டரால் நியமிக்கப்பட்ட குழுவினர் சம்மந்தப்பட்ட தேவாலயத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குனருக்கு பரிந்துரைக்கப்படும்.

எனவே வேலூர் மாவட்டத்தில் தகுதியுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து நிதியுதவி பெற்று பயன்பெறலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story