மானாவாரி நிலத்தில்-ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் ஆஷா அஜீத் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் மானாவாரி நிலத்தில் மானிய உதவியுடன் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் மானாவாரி நிலத்தில் மானிய உதவியுடன் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த பண்ணையம்
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் நடப்பாண்டு வேளாண்மைத்துறையின் மூலம் 300 எக்டேர் பரப்பளவில் மானாவாரி நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க இலக்கு வரப்பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள், சொந்த செலவில் ரூ.60 ஆயிரத்தில் பயிர்சாகுபடி செயல்விளக்கத்திடல், மண்புழுஉரத்தொட்டி மற்றும் ஒரு கறவை மாடு (அல்லது) 10 ஆடுகள் மற்றும் பழ மரக்கன்றுகள், தேனீ வளர்ப்பு பெட்டி போன்றவற்றை அமைக்க வேண்டும்.
இவ்வாறு ஒருங்கிணைந்த பண்ணையத்தை அமைத்த விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். விருப்பம் உள்ள அனைத்து வட்டார விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
சிறப்பு மானியம்
இத்திட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் அனைத்து வட்டாரங்களிலும் பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இத்திட்டம் விவசாயிகள் பயிர் சாகுபடி முறையில் அதிக உற்பத்திக்கான தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும், பண்ணை கழிவுகளை மறுசுழற்சி செய்திடவும், காலநிலை மற்றும் சமூக பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு பால் உற்பத்தி மூலம் ஆண்டு முழுவதும் நிலையான வருமானம் கிடைக்கவும் வழிவகை செய்கிறது.
மேலும், இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் ஆதிதிராவிட சிறு குறு விவசாயிகளுக்கு தமிழக அரசு கூடுதலாக 20 சதவீதம் சிறப்பு மானியமாக எக்டேருக்கு ரூ.12 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.42 ஆயிரம் வழங்கப்படும். ஆதலால் விருப்பமுள்ள சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்,
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.