மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மணிமேகலை விருது பெற வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு
அரியலூர் மாவட்டத்தில், மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊரக மற்றும் நகர்ப்புற கூட்டமைப்புகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் 2022-23-ம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர், மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளிலுள்ள சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகியவற்றுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டு, அதன்படி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளார்.
விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
மணிமேகலை விருது பெறுவதற்கான தகுதியுள்ள சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம், வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகள், முறையான கூட்டம் நடத்தல், சேமிப்பு செய்ததை முறையாக பயன்படுத்தல், வங்கி கடன் பெற்றிருத்தல், குழு உறுப்பினர்கள் பொருளாதார மேம்பாடு அடைதல், உறுப்பினர்கள் திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதார பயிற்சி பெற்றிருத்தல், சமூக நல செயல்பாடுகளில் பங்கேற்றல் போன்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் மணிமேகலை விருதிற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் மதிப்பீட்டு காரணிகள் குறித்த விவரங்களை தொடர்புடைய கூட்டமைப்புகள் அல்லது வட்டார இயக்க மேலாண்மை அலகில் பெற்றுக்கொள்ளலாம். விருதிற்கு தகுதியான சமுதாய அமைப்புகள் தொடர்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலகில் வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.