பழனி நாதஸ்வர-தவில் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்
பழனி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் நாதஸ்வர-தவில் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் நாதஸ்வர-தவில் கல்லூரி, வேத சிவாகம பாடசாலை ஆகியவை செயல்பட்டு வருகிறது. இவற்றில் சேருவதற்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பழனி முருகன் கோவில் நாதஸ்வரம்-தவில் கல்லூரியில் 3 ஆண்டு சான்றிதழ் படிப்பும், வேத சிவாகம பாடசாலையில் 5 ஆண்டுகள் சான்றிதழ் பயிற்சி படிப்பும் உள்ளன. இதில், சேரும் மாணவர்களுக்கு இலவசமாக உணவு-தங்குமிடம் மற்றும் மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. நாதஸ்வர-தவில் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி முடிவில் நாதஸ்வரம், தவில் இலவசமாக வழங்கப்படும்.
இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 13 வயது முதல் 16 வயதுடையவர்கள் அடுத்த மாதம் (ஜூலை) 25-ந்தேதி வரை விண்ணப்பங்களை அனுப்பலாம். அதேபோல் வேத சிவாகம பாடசாலையில் சேர 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 12 வயது முதல் 16 வயதுடையவர்கள் அடுத்த மாதம் (ஜூலை) 25-ந்தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.