சவுதி அரேபியாவில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


சவுதி அரேபியாவில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
x

சவுதி அரேபியா அமைச்சகத்தில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், இதற்காக மாவட்டங்களில் சிறப்பு முகாம் இன்று முதல் நடக்க உள்ளது.

விருதுநகர்

சவுதி அரேபியா அமைச்சகத்தில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், இதற்காக மாவட்டங்களில் சிறப்பு முகாம் இன்று முதல் நடக்க உள்ளது.

செவிலியர்கள்

சவுதி அரேபியா அமைச்சகத்தில் பணிபுரிய பெண் செவிலியர்கள் பணிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:-

செவிலியர் பணியிடம் சவுதி அரேபியா அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவமுள்ள பி.எஸ்.சி. தேர்ச்சி பெற்ற 35 வயதுக்குட்பட்ட பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.80 ஆயிரம் வழங்கப்படும். மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இந்த பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு அருகிலேயே பதிவு செய்வதற்கு கீழ்க்கண்டவாறு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 7-ந் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 11-ந் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 17-ந் தேதியும், வேலூர் மாவட்டத்தில் நாளையும், கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 1-ந் தேதியும், திருநெல்வேலி மாவட்டத்தில் செப்டம்பர் 4-ந் தேதியும் முகாம் நடைபெற உள்ளது.

இடைத்தரகர்கள் கிடையாது

இந்த முகாமிற்கு வர முடியாதவர்கள் தங்களுடைய சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரடியாக முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

சவுதி அரேபியாவில் செவிலியர் பணியிடங்களுக்கு தகுதியை பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். இந்த பணிக்கு தேர்வு வரும் பணியாளரிடமிருந்து சேவை கட்டணமாக ரூ.35,400 மட்டும் வசூலிக்கப்படும்.

இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story