மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் அதற்கும்கீழ் படித்தவர்களுக்கு ரூ.600-ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பற்ற அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையானது 3 மாதங்களுக்கு ஒருமுறை சேர்ந்து வழங்குவதற்கு பதிலாக மாதந்தோறும் பயன்பெறும் வகையில் வழங்கப்படவுள்ளது. எனவே, தகுதியுடைய படித்த வேலைவாய்ப்பற்றோர். உதவித்தொகை பெற, திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவடைந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் பள்ளி, கல்லூரியில் நேரிடையாக படித்துக் கொண்டிருக்ககூடாது. (அஞ்சல் வழியில் படிக்கலாம்). பொறியியல், மருத்துவம், விவசாயம் கால்நடை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப்பட்டம் பெற்றவர்கள் இவ்வுதவித்தொகை பெற தகுதியற்றவர்கள்.
முதல்முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் விண்ணப்ப படிவங்களை திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகம் மற்றும் உரிய சான்றிதழ்கள் உடன் வருகிற 28-ந் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்பிக்க வேண்டும்.
இந்த தகவலை கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.