50 சதவீதம் மானியத்துடன் ஜவுளி பூங்கா அமைக்க விண்ணப்பிக்கலாம்


50 சதவீதம் மானியத்துடன் ஜவுளி பூங்கா அமைக்க விண்ணப்பிக்கலாம்
x

50 சதவீதம் மானியத்துடன் ஜவுளி பூங்கா அமைக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும், சிறிய அளவிலான ஜவுளிபூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கும் ரூ.2 கோடியே 50 லட்சம் வரை தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறிய அளவிலான ஜவுளி பூங்கா குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும். இத்தகைய சிறிய ஜவுளி பூங்காவின் அமைப்பில் உட்கட்டமைப்பு வசதிகளான சாலை வசதி, சுற்றுசுவர், கழிவு நீர்வாய்க்கால் அமைத்தல், நீர் வினியோகம், தெருவிளக்கு அமைத்தல், மின்சாரவசதி மற்றும் கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையம், தொலை தொடர்பு வசதி, ஆய்வுக்கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப்பொருட்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளர்கள் விடுதி, அலுவலகம் மற்றும் இதர இனங்கள் உற்பத்தி தொடர்பான தொழிற்கூடங்கள் போன்ற உட்பிரிவுகள் கட்டாயமாக இடம்பெற்றிருந்தால் மட்டுமே அரசின் மானியத்தை பெற தகுதியான முதலீடாக கருதப்படும். மேலும் நிலம், எந்திரங்கள் உள்ளிட்டவைகள் இருக்க வேண்டும். எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 50 சதவீதம் மானியத்துடன் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க விருப்பமுள்ள தொழில்முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு மண்டல துணை இயக்குனர், துணிநூல்துறை, 1A-2/1,சங்ககிரி மெயின் ரோடு, குகை, சேலம் (636 006), 0427-2913006 என்ற தொலைபேசி வாயிலாகவும், ddtextilessalemregional@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும், தொடர்பு கொண்டு பயன்பெறலாம், இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story