முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்


முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
x

முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு கடந்த 2015-ம் ஆண்டு முதல் முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள தலா 3 ஆண்கள், பெண்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கத்தினை உள்ளடக்கியதாக இருக்கும். கடந்த நிதி ஆண்டிற்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இவ்விருது தொடர்பாக 15 வயது முதல் 35 வயது வரையுள்ள கீழ்காணும் தகுதிகள் உள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 1.4.2022 அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் 31.3.2023 அன்று 35 வயதுக்குள்ளவராக இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் 1.4.2022 முதல் 31.3.2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். மேலும் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும் (அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும்). விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய-மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். மேற்காணும் விருதிற்கு விண்ணப்பிக்க www.sdat.tn.gov.in என்ற முகவரியில் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து ஆன்லைன் மூலம் வருகிற 31-ந்தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை 7401703499 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.


Next Story