அரசு மகளிர் தொழிற்பயிற்சியில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் -பயிற்சி கட்டணம் கிடையாது


அரசு மகளிர் தொழிற்பயிற்சியில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் -பயிற்சி கட்டணம் கிடையாது
x
தினத்தந்தி 5 Jun 2023 1:52 AM IST (Updated: 5 Jun 2023 7:14 AM IST)
t-max-icont-min-icon

அரசு மகளிர் தொழிற்பயிற்சியில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பயிற்சி கட்டணம் எதுவும் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை


அரசு மகளிர் தொழிற்பயிற்சியில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பயிற்சி கட்டணம் எதுவும் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சலுகைகள்

மதுரை மகளிர் அரசு தொழில்பயிற்சி நிலையம் முதல்வர் அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) மதுரையில், 2023-ம் ஆண்டிற்கான சேர்க்கைக்கு அரசு ஒதுக்கீட்டின்படி கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பெறப்பட்டு வருகிறது. அதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற 7-ந் தேதி ஆகும். அதற்கு பயிற்சி கட்டணம் கிடையாது. இதில் சேருபவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.750 வழங்கப்படும். மேலும் உதவித்தொகையுடன் கூடுதலாக புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மாதந்தோறும் கூடுதலாக ரூ.1000 வழங்கப்படும்.

இது தவிர விலையில்லா மிதிவண்டி, விலையில்லா இரண்டு செட் சீருடை, தையற்கூலி, விலையில்லா ஒரு செட் காலணி, கட்டணமில்லா பஸ் சலுகை, உணவுடன் கூடிய இலவச தங்கும் விடுதி வசதி உண்டு, விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபட கருவிகள் வழங்கப்படும். மேலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி எஸ்.எஸ்.எல்.சி. முடித்து 2 ஆண்டு ஐ.டி.ஐ. தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப்பாடங்கள் தமிழ், ஆங்கிலம் மட்டும் எழுதி பிளஸ்-2 வகுப்பு சான்றிதழ் பெறலாம். இதுபோல 8-ம் வகுப்பு முடித்து 2 ஆண்டு ஐ.டி.ஐ தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப்பாடங்கள் தமிழ், ஆங்கிலம் மட்டும் எழுதி எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு சான்றிதழ் பெறலாம்.

தையல் கலை

இந்த பிரிவில் சேர 14 வயதிற்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் கலந்தாய்வுக்கு தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு நடைபெறும் நாள் உள்ளிட்ட விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ.50 ஆகும். அரசு தொழிற்பயிற்சி நிலையம் மதுரை (மகளிர்)-ல் பயிற்சி பெற விரும்புபவர்கள் தையல் கலை பிரிவிற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மற்ற பிரிவுகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஒரு வருட தொழிற்பிரிவுகளில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் (computer operator and Programming Assisitant), டெக்ஸ் டாப் பப்ளிஷிங் (Desktop Publishing Operator), சீவிங் டெக்னாலஜி (Sewing Technology, Cosmotology) ஆகியவை உள்ளன. 2 ஆண்டு தொழில்பிரிவில் எலக்ட்ரானிக் (Electronic) மெக்கானிக் (Mechanic), டெக்னிஷியன் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ் (Technician Medical Electronics) ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. இது குறித்த மேலும் விவரங்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) மதுரை-ல் 0452--2560544, 9843065874, 8220786735 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story