மானிய விலையில் முள் இல்லா மூங்கில் கன்றுகள் பெற விண்ணப்பிக்கலாம்
திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மானிய விலையில் முள் இல்லா மூங்கில் கன்றுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் இளவரசன் தெரிவித்துள்ளார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மானிய விலையில் முள் இல்லா மூங்கில் கன்றுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் இளவரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பச்சை தங்கம்
மூங்கில் புல் வகையைச் சார்ந்த ஒரு தாவரமாகும். இதனை பச்சை தங்கம் என்றும் அழைக்கப்படும் இம்மூங்கிலானது உலகில் சுமார் 1400 இனங்கள் உள்ளன. அவற்றில் 136 இனங்கள் மட்டுமே இந்தியாவில் உள்ளன. தமிழ்நாட்டில் பெருவாரை (பொந்து மூங்கில்) மற்றும் சிறுவாரை (கல் மூங்கில்) என்ற இரண்டு இனங்கள் மட்டுமே உள்ளன. இவைகளில் முட்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து காணப்படுவதால் விவசாயிகள் வெட்டி எடுப்பதற்கு மிகுந்த சிரமமும், அதிக செலவும் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். ஆனால் முள்ளில்லா மூங்கிலில் இப்பிரச்சினை இல்லை.
முள் இல்லா மூங்கில்
வனத்துறை ஆராய்ச்சி பிரிவு தமிழ்நாட்டின் அனைத்து மண் வகை மற்றும் தட்ப வெப்ப நிலைக்கு உகந்த நான்கு முள்ளில்லா மூங்கில் இனங்களை பல சோதனைகளின் மூலம் கண்டறிந்து அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஒன்றுதான் பேம்பூஸா பல்கூவா என்ற ஒரு ரகமாகும். இந்த ரகம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
இந்த மூங்கில் கன்றுகள் நடப்பட்ட 5-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு தூரிலும் இருந்து 40 மூங்கில் கழிகள் வளர்ந்திருக்கும். இதேபோல் ஒவ்வொரு மூங்கில் குத்திலிருந்தும் 8 முதல் 10 வரை முதிர்ந்த மூங்கில்களை அறுவடை செய்யலாம்.
ஏக்கருக்கு ரூ.19 ஆயிரம் வருமானம்
ஏக்கருக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.19 ஆயிரம் வருமானம் கிடைக்கும் இந்த வருமானம் ஆண்டுகள் செல்லச் செல்ல பல மடங்கு அதிகரிக்கும். பேம்பூஸா பல்குவா என்ற முள் இல்லா மூங்கில் ரகம் பெரிய வீடுகள் மற்றும் உணவகங்களில் உள் மற்றும் வெளி அலங்கார மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இதன் இளம் குருத்துகள் ஊறுகாய் தயாரிக்கவும், கைவினைப் பொருட்கள் தயாரிக்கவும், நூல் இழைகள், ஆடைகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.மூங்கில்களில் பேப்பர், பிளைவுட், அகர்பத்தி, பட்டாசுகள் கூடைகள், பர்னிச்சர் தயாரிக்கும் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. அது மட்டுமல்லாமல் சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் மூலப் பொருளாகவும் பயன்படுகிறது.
மானிய விலையில் வழங்கப்படுகிறது
இந்த முள்ளில்லா மூங்கில் கன்றுகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை விவசாயிகள் தொடர்பு கொண்டு தேவையான ஆவணங்களான கணினி சிட்டா, அசல் அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு மற்றும் ஆதார் நகல் ஆகியற்றை சமர்ப்பித்து பதிவு செய்து மானிய விலையில் முள்ளில்லா மூங்கில் கன்றுகள் பெற்று பயன் அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.