மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரின் புதிய அறிவிப்பின்படி தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) 2022-23-ம் நிதியாண்டிற்கு தாட்கோ திட்டம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத்திட்டங்களுக்கு 'மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம்" அமைக்க விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 சங்கம் அமைப்பதற்கு மட்டும் ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படுவதற்கான அரசாணை வரப்பெற்றுள்ளது. இத்திட்டத்தின் நிபந்தனையாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும், வயது வரம்பு 18-65 வரையும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமலும், சங்க உறுப்பினர் குறைந்தபட்சம் 1 கறவை மாடாவது வைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர், தாட்கோ திட்டத்தின் கீழ் மானியம் பெற்றிருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு சங்கத்திற்கு ரூ.1 லட்சம் நிதி விடுவிக்கப்படும்.
பயன்பெறலாம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் இச்சங்கத்தில் உறுப்பினர்களாக் கப்படுவர். சம்பந்தப்பட்ட மாவட்ட துணைப்பதிவாளரால் (பால்வளம்) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க உரிய முன்மொழிவு பெறப்பட 4 மாத காலத்திற்குள் சங்கத்தை பதிவு செய்ய மாவட்ட துணைப்பதிவாளரால் (பால்வளம்) நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சங்க உறுப்பினர்கள் மூலமாக பெறப்படும் பாலின் அளவு சங்கத்தில் பரிசோதனை செய்யப்பட்டு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மகளிர் குழுக்கள் அதிகம் பயன்பெற்ற கிராமங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தை 04146-222863 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.