தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்
தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்-ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் பொய்யூர் அருகே மல்லூர் கிராமத்தில் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. இந்த தொழிற்பேட்டையில் சாலை வசதி, தெரு விளக்கு வசதி மற்றும் மழை நீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகளுடன் கூடிய 26 தொழில் மனைகள் உருவாக்கப்பட்டு, அதில் 22 தொழில் மனைகள் தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்காக தயார் நிலையில் உள்ளது. மேலும், தொழில் தொடங்குவதற்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் மாவட்ட தொழில் மையம் மூலமாக கடன் பெற உதவி செய்யப்படுகிறது. ஒதுக்கீடு செய்யப்பட்ட தொழில் மனைகளை பத்திர பதிவு செய்யும் போது 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும். தொழில் முனைவோர்கள் சிட்கோ தொழிற்பேட்டையில் ஒதுக்கீடு பெற www.tansidco.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம், என்று சிட்கோ தொழிற்பேட்டை கிளை மேலாளர் ராஜாராமன் தெரிவித்துள்ளார்.