துபாய் எம்ரில் நிறுவனத்தின் பணிநியமன ஆணை வழங்கும் விழா
அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் துபாய் எம்ரில் நிறுவனத்தின் பணிநியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.
வேலூரை அடுத்த அரப்பாக்கத்தில் உள்ள அன்னை மிரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் துபாய் எம்ரில் நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. ஆன்லைன் மூலம் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்வாகிய மாணவர்களுக்கு இ-மெயில் மூலம் பணி நியமன ஆணை அனுப்பப்பட்டது.
அந்த ஆணைகளை கல்லூரியின் நிறுவனரும், தலைவருமான எஸ்.ராமதாஸ் மற்றும் செயலாளரும், பொருளாளருமான ஜி.தாமோதரன் ஆகியோர் மாணவர்களின் பெற்றோர்களிடம் வழங்கினர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சமாகும்.
இந்த நிகழ்ச்சியில், கல்லூரியின் நிறுவனர் எஸ்.ராமதாஸ் பேசுகையில், நடப்பு கல்வியாண்டில் இறுதியாண்டு படித்த அனைத்து மாணவர்களும் முன்னணி பன்னாட்டு நிறுவனங்களான துபாய் எம்ரில், சோகோ, டி.வி.எஸ். போன்றவற்றில் குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.8 லட்சத்து 60 ஆயிரம் வரை ஆண்டு வருமானத்தில் பணி அமர்த்தப்பட்டனர். துபாய் எம்ரில் நிறுவனத்தில் 6 ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்ட அன்னை மிரா பொறியியல் மாணவர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர் என்றார்.
நிகழ்ச்சியில், கல்லூரி இயக்குனர்கள் பிரசாந்த், கிஷோர், முதல்வர் டி.கே.கோபிநாதன், துணை முதல்வர் டி.சரவணன், நிர்வாக அதிகாரி எஸ்.சாண்டில்யன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.