குத்தகை பணியில் ஊழியர்கள் நியமனம் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவர்கள், டீன்கள், இயக்குனர்கள் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில், உதவி எழுத்தர், கணினி இயக்குபவர், அலுவலக உதவியாளர், பியூன் உள்ளிட்ட பணிகளுக்கு இனி தினக்கூலி, தற்காலிக அடிப் படையில் எவரும் நியமிக்கப்படமாட்டார்கள்; மாறாக அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையில் மட்டுமே நியமிக்கப்படுவர் என்று கூறியுள்ளார். தனியார் மனிதவள நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் ஊழியர்களை பெறுவது குறித்த நடைமுறைகள் அடுத்த ஒரு மாதத்தில் இறுதி செய்யப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு மிகவும் தவறானது
இதைவிட அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், குத்தகை முறையில் ஊழியர்களை நியமனம் செய்வது குறித்த நடைமுறைகள் இறுதி செய்யப்பட்ட பிறகு இப்போது பணியில் இருக்கும் தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பது தான். இதை அண்ணா பல்கலைக்கழக தற்காலிக பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் உறுதி செய்திருக்கின்றனர். இது உண்மையாக இருந்தால் 400-க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் வேலை இழப்பார்கள். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு குத்தகை முறையில் பணியாளர்களை நியமிப்பது என்பது இப்போது எடுக்கப்பட்ட முடிவு அல்ல. கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முடிவை தமிழ்நாடு அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பலமுறை வலியுறுத்தியிருக்கிறது.