புதிய பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயார்


புதிய பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயார்
x
தினத்தந்தி 24 Sept 2023 12:15 AM IST (Updated: 24 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பழுதடைந்த மடப்புரம் நடைபாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவாரூர்

பழுதடைந்த மடப்புரம் நடைபாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நடைபாலம்

திருவாரூரில் பழுதடைந்து இடியும் நிலையில் உள்ள மடப்புரம் நடை பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளதால் நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூர் நகருக்குள் வருவதற்கு மடப்புரம் என்ற இடத்தில் ஓடம்போக்கியாற்றின் குறுக்கே சிறிய நடைபாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தினை மோட்டார் சைக்கிள், சைக்கிள், நடந்து செல்பவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் சேதமடைந்து காணப்படுகிறது.

இடிந்து விழும் நிலையில்...

பாலத்தின் தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. பழுதடைந்த பாலத்தை இடித்து அனைத்து வாகனங்களும் செல்லும் வகையில் புதிதாக அகலமான பாலம் கட்டிடத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் நகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுவித்துள்ளனர். பழுதடைந்த மடப்புரம் பாலத்தை புதிதாக கட்டி தர வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ. பூண்டி கே.கலைவாணன் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். கடந்த மாதம் திருவாரூர் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மடப்புரம் பாலத்தை பார்வையிட்டு, புதிய பாலம் கட்ட திட்ட வடிவம் தயார் செய்யப்பட்டு அரசு கருத்துரு அனுப்பி வைக்க நகராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

திட்ட மதிப்பீடு

அதன்படி திருவாரூர் நகராட்சி மூலம் அனைத்து வாகனங்களும் செல்லும் வகையில் 41 மீட்டர் நீளமும், 6 மீட்டர் அகலம் கொண்ட புதிய பாலம் கட்டிட திட்டமிட்டுப்பட்டுள்ளது. இந்த புதிய பாலம் ரூ.5 கோடி மதிப்பில் கட்டிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த திட்டப்பணிக்கான கருத்துரு தயார் செய்யப்பட்டு அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியும், நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளதால் நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து நகர மன்ற உறுப்பினர் அசோகன் கூறுகையில், தஞ்சை சாலையில் இருந்து திருவாரூர் நகருக்கு எளிதாக வருவதற்கு மடப்புரம் நடைபாலத்தை தான் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல் குறையும்

இந்த பாலம் கட்டி பல ஆண்டுகள் ஆவதால் பழுதடைந்து காணப்படுகிறது. இதனை இடித்து விட்டு அனைத்து வாகனங்களும் செல்லும் வகையில் புதிய பாலம் கட்ட வேண்டும் என நகர மன்ற தலைவர் மற்றும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. முயற்சியாலும், புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர், துறை அமைச்சர் ஆகியோருக்கு நகர மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். புதிய பாலம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு உள்ள நிலையில், அதற்கான நிதி பெறப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதனால் நகரின் போக்குவரத்து நெரிசல் நிச்சயம் குறையும் என்றார்.


Next Story