தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு
கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 6-ந் தேதி மாலை கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது.
இதையொட்டி திருவண்ணாமலைக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக வந்தனர்.
தொடர்ந்து நேற்று காலையில் இருந்து இன்று காலை வரை பவுர்ணமி நீடித்ததால் இன்று காலை வரை தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.
கிரிவலப் பாதையை தூய்மை பணி மேற்கொள்ள 20-க்கும் மேற்பட்ட நகராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் திருவண்ணாமலை நகரத்திற்கு வந்தனர்.
தூய்மை பணியில் ஈடுபட்ட அவர்களை திருவண்ணாமலை நகராட்சி சார்பில் பாராட்டி உணவு மற்றும் பரிசுகள் வழங்கி வழி அனுப்பும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.
நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமை தாங்கி தூய்மை பணியாளர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார். மேலும் அவர்களுக்கு உணவை பரிமாறினார்.
அப்போது நகரமன்றத் துணைத்தலைவர் ராஜாங்கம், தூய்மை அருணை மேற்பார்வையாளர் கார்த்தி வேல்மாறன், நகராட்சி ஆணையாளர் முருகேசன், நகராட்சி பொறியாளர் நீலேஸ்வர், நகராட்சி மேலாளர் பிரகாஷ் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.