கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற காரைக்குடி மாணவருக்கு பாராட்டு
கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற காரைக்குடி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
காரைக்குடி,
காரைக்குடி அருகே உள்ள புதுவயல் ஸ்ரீவித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர் எம்.பிரனேஷ் (வயது 15). இந்நிலையில் சமீபத்தில் சுவீடன் நாட்டில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் பிரனேஷ் கலந்துகொண்டு இந்தியாவின் 79-வது கிராண்ட் மாஸ்டராகவும், தமிழகத்தில் 28-வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதையடுத்து தமிழகம் திரும்பிய அவரை சென்னையில் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர் நேற்று சென்னையில் இருந்து காரைக்குடிக்கு வந்த பிரனேசை வித்யாகிரி பள்ளிக்குழுமத்தின் சார்பில் அதன் தலைவர் கிருஷ்ணன், செயலாளர் மற்றும் தாளாளர் சுவாமிநாதன், பொருளாளர் முகமதுமீரா, தலைமை நிர்வாக அதிகாரி ஐஸ்வர்யா சாய்சரண், பள்ளி முதல்வர்கள் ஹேமமாலினி சுவாமிநாதன், குமார் மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
அதன் பின்னர் பிரனேசை சக மாணவர்கள் உற்சாகமாக தோளில் தூக்கி வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போது இந்திய அளவில் 79-வது கிராண்ட் மாஸ்டராகவும், தமிழகத்தில் 28-வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளேன். பொதுவாக கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கு 2500 புள்ளிகள் இருந்தாலே போதுமானது. ஆனால் கூடுதலாக நான் 4 புள்ளிகளை பெற்றுள்ளேன். அடுத்ததாக என்னுடைய குறிக்கோள் 2600 புள்ளிகளை பெறுவது தான். இந்த சாதனைகள் படைப்பதற்கு என்னுடைய பள்ளி நிர்வாகம், பெற்றோர் முக்கிய காரணமாகும். எனது ரோல் மாடலாக நார்வே வீரர் கார்ல்சன் ஆவார். இவ்வாறு அவர் கூறினார்.